11 அத்தியாயம் 11

விநாயகரைப் பலரும் வணங்கித் துதித்து அவர் அருளைப் பெற்றிருக்கின்றனர். அதில் முக்கியமான சிலர் பற்றி இங்கே காண்போம்:

கிருத வீர்யன் என்னும் மன்னன் புத்திர பாக்கியம் இல்லாமல் தவித்தான். பலவிதமான யாகங்களும், பூஜைகளும் செய்தான். ஆனாலும் பலனில்லை. ஒரு நாள் அவன் கனவில், அவன் தந்தை தோன்றினார். அவனிடம் ஒரு சுவடிக் கட்டைக் கொடுத்து, “மகனே இதில் கண்ட விரதம் இருந்து விநாயகரை வழிபட்டு வா! அவர் அருளால் உனக்கு ஒரு மகன் பிறப்பான்!” என்று சொல்லி மறைந்தார். திடுக்கிட்டு எழுந்த மன்னன் கையில் நிஜமாகவே ஒரு சுவடிக் கட்டு இருக்கப் பண்டிதர்களிடம் அதைக் காட்டி விளக்கம் கேட்கின்றான் மன்னன்.

வேத பண்டிதர்கள் அந்த ஓலைச் சுவடியைப் படித்துவிட்டு வியப்புடன் அரசனிடம் சொன்னார்கள், “அரசே, இது விநாயகனை வேண்டிச் செய்ய வேண்டிய விரதம். இதை அங்காரக சதுர்த்தி விரதம் என்பார்கள். இந்த விரதத்தைப் பற்றிப் பிரம்ம தேவர் சொன்ன விஷயங்கள் சுவடியில் உள்ளன. நாங்கள் இது வரை கேட்டிராத விரதம் இது. இதை நன்கு படித்து அதன்படி நீங்கள் விரதம் இருக்க நாங்கள் உதவுகிறோம்.” என்றனர்.

பெளர்ணமி தினத்துக்குப் பின்னர் வரும் சதுர்த்தியைப் பொதுவாகச் சங்கடஹர சதுர்த்தி எனச் சொல்லுவதுண்டு. அந்தச் சதுர்த்தியானது அங்காரகன் என்னும் செவ்வாய்க்கு உரிய செவ்வாய்க் கிழமைகளில் வந்ததால் அதை அங்காரகச் சதுர்த்தி என்பது உண்டு. அம்மாதிரி அங்காரகச் சதுர்த்தி அன்று மன்னன் விரதத்தைத் துவக்கினான். விக்னம் இல்லாமல் விரதம் அனுசரித்து, விநாயகர் உதவியுடன் விரதத்தை முடித்தான். அவன் மனைவியும் கருவுற்றாள். மன்னனின் மகிழ்ச்சி, பிறந்த குழந்தையைப் பார்த்ததும் ஓடிப் போனது. கைகளோ, கால்களோ இல்லாமல் பிறந்தது ஒரு ஆண் குழந்தை மன்னனுக்கு!

கலங்கிய மன்னனும், ராணியும் விநாயகர் அருளினால் பிறந்த பிள்ளைக்கு ஏற்பட்டிருக்கும் இந்தக் குறையை விநாயகர் தான் தீர்த்து வைக்க வேண்டும் என முழு மனதுடன் பிரார்த்தித்தனர். மகனுக்குக் “கார்த்த வீர்யன்” எனப் பெயரிட்டு வளர்த்து, உரிய வயது வந்ததும், கணேச மூல மந்திரத்தைக் கற்றுக் கொடுத்தார்கள். மூல மந்திரத்தை ஜபித்துப் பன்னிரு ஆண்டுகள் விடாமல் தவம் இருந்தான் கணபதியை நோக்கிக் கார்த்தவீர்யன். விநாயகரும் அவன் முன் தோன்றினார்.

“கார்த்தவீர்யா! குறையுடன் பிறந்த நீ இவ்வாறு நிறைவாக எம்மைப் பூஜித்தாய்! உனக்கு என் ஆசிகளைத் தருவதோடு அல்லாமல் ஆயிரம் கை, கால்கள் தோன்றவும் அருளுகிறேன்!” என வரம் தந்தார். ஆயிரம் கரங்களும், மிகுந்த பலத்துடனும், யாராலும் வெல்ல முடியாத திறத்துடனும் இருந்ததால் அர்ஜுனனுக்கு நிகரானவன் எனப் பேசப் பட்டு அவன் பெயரே “கார்த்தவீர்யார்ஜுனன்” என அழைக்கப் பட்டது. தனக்குக் கால்களும், கைகளும் அளித்த விநாயகருக்குக் கார்த்த வீர்யாஜுனன், பிரவாள வனம் என்னும் வனத்தில் பவளத்தால் சிலை அமைத்து ஆலயம் கட்டி வழிபாடு செய்தான்.

Ganesha!!!

Feedback/Errata

Comments are closed.