14 அத்தியாயம் 14

விநாயகரின் திருவிளையாடல்களில் அநேகம் உண்டு. அவற்றில் சில குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதாய் இருக்கின்றன. ராவணேஸ்வரன் ஒரு முறை கைலைக்கு வந்து, சிவ வழிபாடு முடிந்துத் திரும்பிச் செல்லும் வேளையில், சிவலிங்கத்தின் ஜோதி வடிவம் ஒன்றைத் தனக்கு இலங்கையில் வைத்துப் பூஜிக்க வேண்டி இறைவனை வேண்டிப் பெற்றுச் செல்கின்றான். ராவணனிடம் அதைக் கொடுத்துப் பூஜித்து வரும்படி சொன்ன ஈசன் அவனிடம், “இந்த லிங்கத்தை வழியில் எங்கும் வைத்துவிடாதே! அப்புறம் அது உன்னுடையது அல்ல!” என்று எச்சரித்து அனுப்புகிறார். ராவணனும் அவ்வாறே வழியில் எங்கும் லிங்கத்தை வைக்காமல் வேக வேகமாய் இலங்கை நோக்கிச் செல்ல ஆரம்பிக்கின்றான்.

ஆனால் தேவாதி தேவர்களுக்கு அந்த லிங்கம் பாரதத்திலேயே பிரதிஷ்டை செய்யப் படவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் ராவணனோ சிறந்த சிவ பக்தன். அவனிடம் இருந்து அதைத் திரும்பப் பெற முடியாது. என்ன செய்யலாம்? யோசித்த அமரர் குலத்தவர் விநாயகனைப் பணிய, விநாயகனோ, அவனிடம் இருந்து அறவழியில் மட்டுமே லிங்கத்தைக் கேட்கலாமே அன்றி, பறிக்க முடியாது எனச் சொல்கின்றார். பின்னர் ஒரு சிறு பிள்ளை உருவத்தில் ராவணனின் வழியில் போய் நின்று கொண்டு அங்கும், இங்குமாய் அலைகின்றார். மாலை ஆயிற்று, மாலைக் கடன்கள் நிறைவேற்ற வேண்டிய நேரமும் வந்து விட்டது. மேலைக்கடலில் சூரியன் அஸ்தமிக்க ஆரம்பித்தான். ராவணன் மாலைக்கடனை எவ்விதம் முடிப்பது எனச் சிந்தித்தான். லிங்கத்தையோ கீழே வைக்க முடியாது. பின்னர் என்ன செய்வது? யோசனையுடன் பார்த்தவன் கண்களுக்குச் சிறு பிள்ளை ஒருவன் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருப்பது கண்ணில் பட்டது. உடனேயே அந்தப் பிள்ளையைக் கூப்பிட்டு, “பிள்ளாய்! சற்று நேரம் இந்த லிங்கத்தைக் கையில் வைத்துக் கொண்டிரு. கீழே வைத்து விடாதே. நான் என் மாலை நேரப் பூஜைகளையும், வழிபாடுகளையும் நிறைவேற்றி விட்டு வருகின்றேன். அதுவரை உன் கையிலேயே இந்த லிங்கம் இருக்கட்டும்,” என்று சொல்லுகிறான்.

பிள்ளையாய் வந்த பிள்ளையாரோ, “எனக்குக் கை வலிச்சால் நான் என்ன செய்யட்டும்?” என்று கேட்கவே, அதற்குள்ளாய் நான் வந்து விடுவேன், என்று சொல்லிய ராவணன், மாலைக் கடன்களை நிறைவேற்றக் கடலில் இறங்கி சந்தியாவந்தனம் போன்ற ஜபங்களை ஆரம்பிக்கின்றான். ஜபங்களில் ராவணன் ஆழ்ந்து போகும் வரை கரையில் நின்ற விநாயகனோ, ராவணன் இனி பாதியில் வர முடியாது என்பது நிச்சயம் ஆனதும், அந்த லிங்கத்தைக் கீழே வைத்து விட்டு, “எனக்குக் கை வலிக்கிறது, நான் போறேன்’ என்று கூவிக் கொண்டு ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தான். கோபம் கொண்ட ராவணன், பாதியிலேயே ஓடி வந்து, அந்தப் பையனைக் கூப்பிட்டுக் கொண்டே வந்து லிங்கத்தை எடுக்கக் கீழே குனிந்தால் ஆஹா, லிங்கம் அப்படியே பிரதிஷ்டை ஆகிவிட்டதே? இது என்ன ஆச்சரியம்? திகைத்தான் ராவணன். சுற்றும், முற்றும் பார்த்தான், விநாயகர் தன் சுய உருவில் காட்சி கொடுத்தார், “ராவணேஸ்வரா, இந்த லிங்கம் இங்கே மேலைக் கடலில், “திருக்கோகர்ணம்” என்ற பெயரில் இங்கேயே நிலைத்து நிற்கட்டும். உனக்கும் இங்கே முக்கியத்துவம் உண்டு. நீ சிவ பூஜையைத் தொடர்ந்து செய்து வா. இது இவ்வாறு இருக்க வேண்டும் என்பது நியமம். ஆகவே கலங்காதே!” எனச் சொல்ல மனம் ஒருவாறு ஆறுதல் அடைந்த ராவணன், லிங்கத்தை அங்கேயே பிரதிஷ்டை செய்துவிட்டு இலங்கை நோக்கிப் போனான்.

இந்தக் கோயில் கர்நாடகம், கோவா எல்லையில் மேலைக்கடலில்(அரபிக்கடல்) கடலைப் பார்த்தவண்ணமாய் உள்ளது. கோயிலுக்குத் திருக் கோகர்ணம் என்றே பெயர் இன்னமும் வழங்குகிறது. –

https://upload.wikimedia.org/wikipedia/commons/1/1d/InsideWallPic_%2810%29.jpg

Feedback/Errata

Comments are closed.