20 அத்தியாயம் 20

யாதவகுலத் தலைவர்களில் ஒருவன் ஆன சத்ராஜித் கொஞ்சம் செல்வமும், வளமும் பெற்றவன். அவனிடம் இருந்த செல்வத்துக்கு ஈடு இணை இல்லை என சக யாதவர்களால் பேசப் பட்டவன். அவன் தினமும் சூரியனை வணங்கி வரும் வழக்கத்தை உடையவன். ஒரு முறை சூரிய பகவான் அவன் பிரார்த்தனையில் மனம் மகிழ்ந்து அவனுக்குக் கிடைத்தற்கரிய ஒப்பற்ற மணி ஒன்றைக் கொடுத்தான். அது ச்யமந்தக மணி எனப் பெயர் பெற்றது. கோடி சூரியப் பிரகாசம் உள்ள அந்த மணி இருக்கும் இடத்தில் தினம் தினம் தங்கத்தையும், மற்ற நவரத்தினங்களையும் கொடுக்கும் பேறு பெற்றது. சத்ராஜித் இதனால் மீண்டும் மிகுந்த செல்வந்தன் ஆனதோடு இந்த மணியையும் பாதுகாத்து வந்தான். மணியை ஒரு தனி அறையில் வைத்து பாதுகாவலர்களோடு அதை மிகப் பத்திரமாயும் ரகசியமாயும் வைத்திருந்தான்.

ச்யமந்தகமணி பற்றியும், அதன் தகுதி பற்றியும் பரவலாய் அனைவரும் அறிந்திருந்தாலும், சத்ராஜித்தை மீறி அதை யாராலும் கொண்டு செல்ல முடியவில்லை. சத்ராஜித்திற்கு ஒரு அழகான பெண் இருந்தாள். அவள் பெயர் சத்யபாமா. அவளை யாதவர்களிலே மற்றொரு குலம் ஆன வ்ருஷ்ணி என்னும் குலத்தைச் சார்ந்த சாத்யகா என்பவனின் பிள்ளையான யுயுதானா சாத்யகி என்பவனுக்கு மணமுடிக்கக் கேட்டபோது சாத்யகா மறுத்துவிட்டான். சத்ராஜித்தி செல்வத்தை உத்தேசித்தும், அவனுடைய பெண்ணான சத்யபாமா செல்வத்திலே பிறந்து வளர்ந்தவள், தன் பிள்ளைக்குச் சரியாக வராது என்பதாலும் நிராகரித்தான். ஆனால் சத்ராஜித்தோ சாத்யகி தன்னை அவமானம் செய்ததாகவே கருதி வந்தான்.

இந்நிலையில் ஜராசந்தனின் தொந்திரவு தாங்காத யாதவர்கள் அனைவரும் கிருஷ்ணரின் உதவியோடு துவாரகைக்கு வந்து அங்கே நகரத்தை நிர்மாணித்து வாழ ஆரம்பித்தனர். அவர்களின் அப்போதைய தலைவன் ஆன உக்ரசேனனுக்குப் பணம் தேவைப் பட்டது. உக்ரசேனர் ஸ்ரீகிருஷ்ணருக்கு ஒரு வகையில் தாத்தாவும் ஆவார். ஆகையால் தன் பாட்டனுக்காகவும், தங்கள் குல நன்மைக்காகவும் வேண்டி சத்ராஜித்திடம் அந்த ச்யமந்தக மணியை உக்ரசேனரிடம் ஒப்படைக்குமாறு ஸ்ரீகிருஷ்ணர் வேண்டினார். ஆனால் சத்ராஜித் மறுத்தான்.

little ganesh

Feedback/Errata

Comments are closed.