29 அத்தியாயம் 29

சிந்தாமணி விநாயகருக்குப் பின்னர் நாம் காண இருப்பவர் சித்தி விநாயகர். இவர் மஹாராஷ்டிராவின் புனே நகரில் இருந்து ஷோலாப்பூர் செல்லும் பாதையில் உள்ள டோண்ட் என்னும் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 20 கிமீ தூரத்தில் உள்ள சித்தடேக் என்னும் ஊரில் கோயில் கொண்டுள்ளார். கேட்டவருக்குக் கேட்டவைகளை அள்ளித் தரும் இந்த சித்தி விநாயகர் மிகவும் வரப்பிரசாதி என்று சொல்கின்றார்கள். இவர் பற்றிப் புராணங்கள் சொல்லும் தகவல்:

“படைப்புத் தொழிலை ஆரம்பித்த பிரம்மா “ஓம்” என்னும் ஓங்காரத்தை ஜபித்தவண்ணம் இருந்தார். விக்கினங்களை நீக்கும் விநாயகரை ஜபித்து வந்ததால் விநாயகரும் அவருக்கு வேண்டிய அருள் புரிந்தார். படைப்புத் தொழிலில் விக்கினங்கள் நேராது எனவும் அருளிச் செய்தார். பிரம்மாவின் தவத்தின் காரணமாய் சித்தி, புத்தி என்னும் இரண்டு பெண்கள் அவருக்குத் தோன்றினார்கள். அவர்களைத் தன் மானஸ புத்திரிகளாய்ப் பாவித்த பிரம்மா ஸ்ரீ விநாயகருக்கே அவர்கள் சொந்தம் என அவருக்கே அர்ப்பணம் செய்தார். இருவரையும் ஏற்றுக்கொண்டு விநாயகர் சித்தி, புத்தி சமேதராய்க் காட்சி கொடுத்தார். பிரம்மா படைப்புத் தொழிலில் ஆழ்ந்திருக்கும்போது யோக நித்திரையில் இருந்த ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் காதுகளில் இருந்து மது, கைடபர் என்னும் இரு அரக்கர்கள் தோன்றினார்கள். இருவரும் தேவர்களுக்கும், பிரம்மாவிற்கும் தொல்லையைக் கொடுத்தனர்.

பிரம்மா நித்திராதேவியை மறைந்து போகுமாறு விண்ணப்பித்துக்கொள்ளவே, அவள் மறைய மஹாவிஷ்ணு கண்விழித்தார். மது, கைடபர்கள் தொல்லை கொடுப்பதைத் தெரிந்து கொண்டு பல்லாண்டுகள் அவர்களுடன் போரிட்டார் மஹாவிஷ்ணு. அவர்களை அழிப்பது அவ்வளவு எளிதாயில்லை. அவர்கள் மனதை மயக்க எண்ணிய மஹாவிஷ்ணு, அருமையான பாடல்களைத் தன் வீணையின் மூலம் மீட்டிப் பாட ஆரம்பித்தார். அவரது கானம் கைலையை எட்ட ஈசன் மனம் மகிழ்ந்தான். தன் பூதகணங்களான நிகும்பன், புஷ்பகந்தா ஆகியோரை அனுப்பி விஷ்ணுவை கைலைக்கு அழைத்து வரும்படி கூற விஷ்ணு கைலை வந்து வீணா கானம் பாடி ஈசனை மகிழ்வித்தார். மயங்கிய ஈசன், மஹாவிஷ்ணுவிற்கு என்ன வேண்டும் எனக் கேட்க, மது, கைடபர்களை அழிக்கும் வழி கேட்கிறார் விஷ்ணு.

ஈசன், மஹாவிஷ்ணுவிடம், “விநாயகனை வணங்கிவிட்டுப் போரைத் தொடங்கவில்லை. அதனால் தாமதம். கணேச மந்திரம் ஜபித்து விநாயகரைத் துதித்துவிட்டுப் போர் புரியுங்கள்.” என்று கூறி கணேச மந்திரத்தையும் உபதேசித்து அருளினார். விநாயகரை தியானித்துத் தவம் புரிந்த மஹாவிஷ்ணுவிற்கு அசுரர்களை அழிக்கும் வல்லமையை அருளினார் விநாயகர். மஹாவிஷ்ணு அசுரர்களிடம் சென்று, தான் அவர்களுக்கு வரங்கள் தருவதாய்ச் சொல்ல எள்ளி நகையாடிய அவர்கள், தாங்கள் மஹாவிஷ்ணுவுக்கே வரங்கள் தருவதாய்க் கூறினர். உடனே விஷ்ணு சாமர்த்தியமாய், “உங்கள் இருவரின் மரணமும் என்னால் நேரவேண்டும்.” என்று கேட்டுவிட்டார். திகைத்த அசுரர்கள் தண்ணீரே இல்லாத இடத்திலேயே தங்களைக் கொல்ல வேண்டும் எனச் சொல்ல, மஹாவிஷ்ணு விஸ்வரூபம் எடுத்து அவர்கள் இருவரையும் தம் தொடையில் வைத்துச் சக்கராயுதத்தால் அழித்தார் பின்னர் வெற்றிக்கு அருளிய விநாயகருக்குப் பெரிய கோயில் கட்டி விக்கிரஹத்தையும் பிரதிஷ்டை செய்ததாய்க் கூறுகின்றனர்.

இங்குள்ள விநாயகர் விக்கிரஹம், நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் இருந்து எடுத்துவரப்பட்டது என்கின்றனர். மஹாவிஷ்ணு கட்டிய கோயில் சிதைந்து போனதாகவும், நீண்ட காலம் கழித்து ஆடு மேய்க்கும் இடையன் கனவில் விநாயகர் தோன்றித் தம் கோயில் இருக்குமிடம் பற்றிச் சொன்னதாகவும், பின்னர் அந்தப் பையன் விக்கிரஹங்களை வைத்துப் பூஜித்ததாயும் சொல்கின்றனர். மீண்டும் விநாயகர் மூலமே முறைப்படி கோயில் கட்ட பேஷ்வாக்கள் காலத்தில் ஏற்பாடு செய்யப் பட்டதாய்த் தெரிய வருகிறது. வட இந்தியக் கோயில்கள் அனைத்துக்கும் புனருத்தாரணம் செய்திருக்கும் ராணி அகல்யா இந்தக் கோயிலுக்கும் திருப்பணி செய்திருக்கிறாள். இதன் அருகிலேயே மஹாவிஷ்ணுவிற்கு ஒரு ஆலயமும், பஞ்சாயதன முறைப்படி அமைந்த சிவாலயம் ஒன்றும் இருப்பதாய்க் கூறுகின்றனர். விநாயகர் விக்கிரஹம் சுயம்பு எனச் சொல்கின்றார்கள். மஹாவிஷ்ணு பிரதிஷ்டை செய்தார் என்பதால் துவாரபாலகர்கள் இங்கே ஜயனும், விஜயனும். இந்தக் கோயில் ஒரு சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது. இங்கேயும் கிரிவலம் வருகின்றனர். கிரிவலச் சுற்றுப்பாதை ஐந்து கிமீட்டர் என்று கூறுகின்றனர். 21 முறை கிரிவலம் வருதல் மிகவும் சிறப்பாய்ச் சொல்லப் படுகிறது.

Ganpati Dada Murti in Gujarat

Feedback/Errata

Comments are closed.