32 அத்தியாயம் 32

புனே நகரில் இருந்து கிட்டத்தட்ட 90 மைல் தூரத்தில் குக்கடி என்னும் நதிக்கரையில் அமைந்துள்ளது ஒரு விநாயகர் கோயில். அதற்கு ஓஜர் விக்னேஷ்வர் என்று பெயர். இது கடந்த முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் தான் கட்டப்பட்டதாய்ச் சொல்கின்றனர். பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோயிலின் விமானம் தங்கத்தால் ஆனது என்றும் சொல்கின்றனர். அஷ்டவிநாயகர் கோயில்களிலும் இந்த ஒரு கோயிலில் மட்டுமே தங்க விமானம் உண்டென்றும் சொல்கின்றனர். இந்தக் கோயில் பற்றிய தல வரலாறு:

ஹேமவதி என்னும் நகரை அபிநந்தன் என்னும் அரசன் ஆட்சிபுரிந்து வந்தான். அவன் யாகங்கள் நிறையச் செய்து வந்தான். ஒரு சமயம் இந்திரபதவி வேண்டி யாகம் செய்தான். யாகம் மிகவும் சிறப்பாகவும், விதிமுறைகளை மீறாமலும் அமைந்து வரவே, இந்திரனுக்குத் தன்னுடைய பதவி போய்விடுமோ என்னும் கவலை வந்துவிட்டது. ஆகவே எப்படியானும் யாகத்தில் பங்கம் ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணினான். தொல்லைகளை எவ்விதமேனும் தர வேண்டும். யோசித்துவிட்டுக் காலதேவனிடம் அபிநந்தன் யாகத்தில் தொல்லைகளைக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டான். காலதேவன் விக்னாசுரன் என்னும் பெயரில் தோன்றி அபிநந்தனின் யாகம் முழுமையாகப் பூர்த்தி ஆகாவண்ணம் பல இடைஞ்சல்களையும் செய்தான். யாகத்தில் பங்கு பெற்ற ரிஷி, முனிவர்கள் இதனால் பல இடையூறுகளையும் சிரமங்களையும் அநுபவித்தனர். யாகக் கிரியைகள் முடங்க ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் நின்றேவிடும் போல் இருக்கும் நிலை வர, அனைவரும் என்ன செய்வது என்று கூடி ஆலோசித்து இதற்குச் சரியான காவல் கஜானனே தருவான் என முடிவுக்கு வந்தனர்.

கஜானனை வணங்கி அவரிடம் முறையிட்டனர். அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கிய விக்னேஸ்வரர் பர்ஷ்வ முனிவருக்கும், அவர் மனைவியான தீப வத்ஸலாவுக்கும் மகனாகப் பிறக்க முடிவு செய்தார். அவ்வண்ணமே பிறந்தார். ஈசனின் ஆலோசனையின் பேரில் அனைவரும் பர்ஷ்வ முனிவரை வந்து சந்தித்தனர். கணபதி என்ற பெயருடன் வளர்ந்து வரும் அவரது குமாரனைப் பற்றிய உண்மையை எடுத்துச் சொல்லி அவதார காரியம் நிறைவேறவும், அவர்களுக்கு உதவி செய்யவும் கணபதியை அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறார்கள். விக்னாசுரனை வேறு எவராலும் அழிக்க முடியாது என்றும் கூறுகிறார்கள். பர்ஷ்வ முனிவரும் ஒப்புக் கொண்டு கணபதியை அவர்களோடு அனுப்பி வைத்தார். தேவர்களோடு சென்ற கணபதி ஈசன் துணையுடன் விக்னாசுரனைத் தனது அங்குசத்தால் பிடித்துக் கொல்லாமல் தேவாதி தேவர்களின் முன்னிலையில் நிறுத்துகிறார். தன்னைக் கொல்லவில்லை என்பதைக் கண்டும், தனக்கு நேரிட்டிருக்கும் மகத்தான பாக்கியத்தை நினைத்து மகிழாமல் விக்னாசுரன் அப்போதும் தீமைகளே செய்ய நினைத்தான்.

காற்றாகவும் கடுங்காற்றாகவும், புயல்காற்றாகவும், அக்னியாகவும், ஊழித்தீயாகவும் மாறினான். அவன் சக்தி அனைத்தையும் திரட்டிக்கொண்டு அந்தப் பகுதியில் பெரு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடச் செய்தான். ஆனால் விநாயகர் அனைத்தையும் தன் தும்பிக்கையும் அங்குசமும் துணைக்கொண்டு தடுத்து நிறுத்தினார். அக்னியாலும் அந்தப் பகுதியை நாசம் செய்ய நினைத்து அவனால் முடியாமல் போகவே தனது இயலாமையைக் கடைசியில் உணர்ந்த விக்னாசுரன் கணபதியின் கால்களைச் சரணம் அடைந்தான். தன்னை அழிக்க வேண்டாம் என்றும் என்றென்றும் தன் பெயர் நிலைத்து நிற்க வேண்டியே தான் இத்தகைய காரியங்களைச் செய்ததாகவும், இத்தகைய செயல்களால் நற்பெயர் கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்டதாகவும் கூறி மன்னிப்புக் கோரினான். அவன் விருப்பத்தைப் புரிந்து கொண்ட கணபதியும் அவன் பெயரான விக்னாசுரன் என்பதில் உள்ள விக்னத்தைத் தன்னோடு சேர்த்துக் கொண்டார். விக்னேஸ்வரர் ஆனார். விக்ன ராஜன் எனவும் அழைக்கப் பட்டார். விக்னாசுரனுக்கும் முக்தி அளித்து அவனைச் சிறப்புறச் செய்தார்.

இந்த ஊரில் உள்ள விக்னேஸ்வரர் ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளதாகவும் நுழைவாயிலில் இரண்டு தீபஸ்தம்பங்கள் இருப்பதாகவும் கூறுகின்றனர். கோயிலுக்குள் நுழையும்போது இருக்கும் இரு துவாரபாலகர்களைத் தாண்டினால் இரு பெரிய கூடங்கள் வருகின்றன. முதல் கூடம் 20 அடி உயரத்திலும் அடுத்தது 10 அடி உயரத்திலும் உள்ளது. முதல் கூடத்தில் துண்டிராஜ் என்பவர் இருக்கிறார். அடுத்த கூடத்தில் விநாயகரின் வாகனமான எலி ஒன்று ஓடும் நிலையிலேயே சலவைக்கல்லால் செதுக்கப் பட்டு வைக்கப் பட்டுள்ளது. பஞ்சாயதன முறையிலான வழிபாட்டுக்குரிய சூரியன், சிவன், விஷ்ணு, அம்பாள், கணபதி ஆகியோருக்கும் தனித்தனியாக சந்நிதியின் நான்கு மூலைகளிலும் இடம் கொடுத்துள்ளதாய்ச் சொல்கின்றனர். மூலவரான விக்னேஸ்வரர் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். இடப்பக்கமாய்த் தும்பிக்கையை வைத்திருக்கும் இவரின் திருமேனியில் சிந்தூரம் பூசப் பட்டுக் காணப்படுகிறது. இரு பக்கமும் அவரின் இரு மனைவியரான சித்தி, புத்தி காணப்படுகின்றனர்.

பெஷாவர் மன்னர்களில் ஒருவரான சிம்மாஜியப்பா இந்தக் கோயிலைத் திருப்பணிகள் செய்து தங்க விமானத்தையும் அமைத்துக் கொடுத்ததாய்ச் செய்திகள் கூறுகின்றன. இந்த சிம்மாஜியப்பா இளவரசனாக இருந்த போது இந்தக் கோயிலுக்கு வந்திருக்கிறார். கோயிலின் நுழைவாயில் உயரம் குறைவாக இருந்ததால் அவர் தலைக்கிரீடம் கீழே விழுந்துவிட்டது. அதைக் கண்ட அவர் தான் இப்போது போர்ச்சுக்கீசியரோடு சண்டை போடச் செல்வதாயும் வெற்றி பெற்று வந்ததும், இந்தக் கோயிலுக்குத் திருப்பணி செய்வதாயும் அப்போது நுழைவாயிலையும் உயரமாக்குவதாயும் பிரார்த்தித்துக் கொண்டார். அவ்வாறே வெற்றி பெற்றுத் திரும்பியதும், இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்தார். அதன் பின்னர் 1967-ம் ஆண்டு அப்பா சாஸ்திரிகள் என்ற கணேச பக்தர் ஒருவரால் இந்தக் கோயில் புனருத்தாரணம் செய்யப் பட்டு யாத்திரிகளுக்கெனத் தனியாக ஒரு விடுதியும் கட்டப் பட்டுள்ளது

பல்லாவேச்வர விநாயகர் = பாலி இது இல்லை. இது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை..

ganesh / handicraft, saras mela, kolkata

Feedback/Errata

Comments are closed.