நம்ம தமிழ்நாட்டில் இருக்கும் நவகிரஹத் தலங்களைப் போல் மஹாராஷ்டிராவில் அஷ்ட விநாயகர் தலங்கள் இருக்கின்றன. இவை புனே நகரைச்சுற்றி எழுநூறு கி.மீ. தூரத்துக்குள்ளாக அமைந்துள்ளன. நம்முடைய சங்கடஹர சதுர்த்தி, மஹாராஷ்டிராவில் சங்கஷ்டஹர சதுர்த்தி என்ற பெயரில் அழைக்கப் படுவதோடு சிறு வயதில் இருந்தே சதுர்த்தி விரதமும் எடுத்துக் கொள்ளும் வழக்கமும் அங்கே உண்டு. இந்த அஷ்ட விநாயகர் தரிசனம் சங்கடஹர சதுர்த்திக்கு விசேஷம் என்று சொல்லப் படுகிறது. அஷ்ட விநாயகர் கோயில்கள் இருக்குமிடம்”

மயூரேசர் = மோர்காம்

ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் = தேயூர்

சித்தி விநாயகர் = சித்த டேக்

ஸ்ரீ மஹா கணபதி = ராஞ்சன் காமின்

ஸ்ரீகிரிஜாத்மஜ விநாயகர் = வேநாத்ரி

ஸ்ரீவிக்னேஸ்வரர் = ஓஜர்

பல்லாவேச்வர விநாயகர் = பாலி

ஸ்ரீ வரத விநாயகர் = மஹத்

கணபதி பப்பா மோரியா புட்ச்யா வர்ஷி லங்கர்யா

மோரியாரே பப்பா மோரியாரே ச்சைன் படேலா அம்பாலா

மோரியாரே பப்பா மோரியாரே’

மேற்கண்ட பாடலை ஒவ்வொரு விநாயக சதுர்த்திக்கும் விஸர்ஜனத்தின் போது நடக்கும் ஊர்வலத்தில் மஹாராஷ்டிர மக்கள் கோஷமிட்டுக் கொண்டே செல்லுவார்கள். அந்த மோரியாரே இந்த மோர்காம்காரர் ஆன மயூரேசர் தான். இந்தக் கோயில் புனே ஷோலாப்பூர் நெடுஞ்சாலையில் புனேயிலிருந்து சுமார் 25 கிமீ தொலைவில் உள்ளது.

இந்தக் கோயிலப் பற்றிச் சொல்லப் படும் தலபுராணம் பின் வருமாறு: கண்டகி நகரை சக்ரபாணி என்னும் மன்னன் ஆட்சி புரிந்து வந்தான். அவனுக்கும் அவன் மனைவியான உக்ராவிற்கும் குழந்தைகள் இல்லாத குறையே பெரியதாக இருந்தது. செளனக் என்னும் முனிவரிடம் சென்று ஆலோசனை கேட்க, சூரியனைக் குறித்துத் தவம் இருக்கச் சொன்னார் அவர். இருவரும் தவம் செய்ய உக்ராவும் நாளாவட்டத்தில் கர்ப்பம் அடைந்தாள். ஆனால் என்ன இது? குழந்தையின் சூடு வயிற்றினுள் நாளாக ஆக அதிகரித்துக் கொண்டே வந்தது. அவளால் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் சூட்டைத் தாங்க முடியவில்லை. தவித்த உக்ரா சூடு தாங்க முடியாமல் கடலினுள் சென்றுவிட்டாள். அவள் தவிப்பைக் கண்டு வருந்திய சமுத்திர ராஜனும், அவள் குழந்தையைத் தான் தாங்கி வெளியே கொண்டு வந்து அவளிடம் ஒப்படைத்தான். சமுத்திரராஜனால் குழந்தை அளிக்கப் பட்டதால் உக்ராவும், சக்ரபாணியும் குழந்தைக்கு “சிந்து” என்ற பெயரை இட்டு வளர்த்து வந்தார்கள்.

சிந்துவுக்குக் குருவாக அமைந்த அசுரர்களின் குருவான சுக்ராசாரியாரிடம் அவன் சூரியனைக் குறித்த மந்திரங்களைக் கற்றான். சுக்ராசாரியாரும் சூரியனைக் குறித்துத் தவம் செய்யச் சொல்லிக் கொடுக்க, சிந்துவும் அவ்வாறே தவம் செய்தான். மனம் மகிழ்ந்த சூரியன் அவனுக்குப் பரிசாக அமுதக் கலசத்தைக் கொடுத்து அதை சிந்துவின் வயிற்றிலேயே அவனை வைத்திருக்கும் படியும், இந்த அமுதக் கலசம் இருக்கும் வரையில் அவனை எவராலும் வெல்லவோ, கொல்லவோ முடியாது என்றும் சொன்னார். சூரியனிடமிருந்து அமுதக் கலசம் பெற்றுக் கொண்ட சிந்து தன் தகப்பனையே விரட்டிவிட்டுத் தானே ஆள ஆரம்பித்தான். குடிபடைகளைத் தொந்திரவு செய்ததோடு, தன்னிடம் அமுத கலசம் இருக்கும் தெம்பில் தேவாதி தேவர்களையும் துன்புறுத்த எண்னினான். இந்திரனையும், தேவர்களையும் சிறை பிடித்தான். கடைசியில் அனைவரையும் காக்க எண்ணிய விஷ்ணுவையும் சிறை பிடித்து கண்டகி நகரிலேயே சிறைவைத்தான். மற்ற தேவர்களும் பிரம்மாவும் கைலை சென்று ஈசனிடம் முறையிட, அவரோ இது விநாயகன் ஒருவனால் மட்டுமே செய்யக் கூடியது, ஆகவே அனைவரும் அவனைச் சரணடையுங்கள். என்று சொல்லிவிட்டார்.

அதன்படி அனைவரும் விநாயரை வந்து வணங்கி வேண்ட, அவரும் தான் மீண்டும் பிறவி எடுக்கும்போதே சிந்துவை அழிக்க முடியும் எனக் கூறினார். விநாயகர் மீண்டும் பிறப்பது எப்படி? அனைவரும் கலங்கினர். மேருமலையில் ஈசனோ அன்னைக்கு “ஓம்” என்னும் ப்ரணவத்தை உபதேசித்துப் பனிரண்டு வருடங்கள் ஜபிக்கும்படி கூறிவிட்டார். உடனேயே பார்வதி களிமண்ணால் விநாயகரை அமைத்து ஈசன் கூறிய வண்ணம் வழிபாடுகள் நடத்தினாள். அவள் செய்த வழிபாட்டால் உயிர் பெற்றார் விநாயகர். ஈசனும் அவரை ஆசீர்வதித்து, விக்னேஸ்வரனை வணங்கிவிட்டு வேலை ஆரம்பிப்பவர்களுக்குத் தடையில்லாமல் வேலை நடக்கும் எனக் கூறுகின்றார். அனைவரும் மேரு மலையிலிருந்து இறங்கி வரும் வேளையில் கமலாசுரன் என்பவனைக் கண்டார்கள். குதிரை மீது அமர்ந்திருந்த அவன், மயிலை வாகனமாய்க் கொண்ட விநாயகரோடு சண்டை போட்டான். அப்போது அவனை வெற்றி கொள்ள முடியவில்லை விநாயகரால்.

அவன் உடலில் காயம் பட்டுக் கீழே விழும் ரத்தத் துளிகளில் இருந்து மீண்டும் மீண்டும் அசுரர்கள் உற்பத்தி ஆய்க் கொண்டே இருந்தனர். ஆகவே பிரம்மாவின் மானச புத்திரிகளான சித்தியையும், புத்தியையும் அழைத்து அந்த ரத்தத் துளிகள் கீழே விழாமல் குடிக்கும்படி விநாயகர் சொல்ல அவர்களும் அவ்வாறே குடித்தனர். கமலாசுரனையும் விநாயகர் கொன்றார். கண்டகி நகரில் சிறைப்பட்டிருந்த அனைவரையும் விடுவிக்குமாறு நந்தியெம்பருமானிடம் சொல்லி அனுப்புகிறார் விநாயகர். ஆனால் சிந்து மறுக்கிறான். எனவே விநாயகர் சிந்துவோடு போரிடுகிறார். விநாயகரின் பாணம் ஒன்று சிந்துவின் வயிற்றைக் கிழித்து அமுதக் கலசத்தையும் உடைத்துவிட, சிந்துவும் மாண்டான். கண்டகி நகரின் பொறுப்பை விநாயகர் ஏற்றுக் கொண்டு அனைவரையும் விடுவிக்கிறார். சித்தி, புத்தியையும் விநாயகர் மணந்து கொள்கின்றார். இந்தப் போரில் விநாயகர் மயிலை வாகனமாய்க் கொண்டு போரிட்டதால் மயூரேசர் எனப் படுகிறார்.

The first shot with the iPhone4