அடுத்து நாம் பார்க்கப் போவது சிந்தாமணி விநாயகர். இவர் தேயூர் என்னும் தலத்தில் குடிகொண்டுள்ளார். இந்த அஷ்ட விநாயகர்களை நாங்க இன்னும் தரிசனம் செய்யவில்லை, என்றாலும் பலரும் கூறுவதைப் பார்த்தும் கேட்டும் எழுதுகிறேன். ஆகவே அநுபவ நிகழ்வுகள் இதில் வராது.

மஹாராஷ்டிரத்தின் புனே நகரில் இருந்து 25 கிமீதூரத்திலே இந்த நகரம் இருக்கிறதாய்ச் சொல்கிறார்கள். ஹவேலி தாலுகாவைச் சேர்ந்த இந்த நகரம் மூவா, முக்தா, பீமா என்னும் மூன்று நதிகள் சங்கமம் ஆகுமிடத்தில் அமைந்துள்ளது. அதிசயமான ஒரு செய்தி என்னவெனில் ஒளரங்கசீப் இந்தக் கோயிலுக்கு மானியமாக நிலம் அளித்ததாகக் கூறப்படும் வரலாற்றுத் தகவல். எத்தனை உண்மை என்று தெரியாது. இனி கோயிலின் வரலாறு பின்வருமாறு:

அபிஜித் என்னும் அரசனுக்குக் குழந்தை இல்லை. அவனும் அவன் மனைவி குணவதியும் வைசம்பாயன முனிவரின் சொற்படி பல்லாண்டுகள் தவம் புரிந்து ஒரு பிள்ளை பிறந்தது. கணராஜா என்னும் பெயர் வைத்து வளர்த்து வந்தனர். மிகவும் தைரியசாலியாகவும், வீரனாகவும் வலர்ந்த அந்தப் பிள்ளை ஒருநாள் வேட்டைக்குச் சென்றான். நண்பர்களுடன் சென்ற அரசகுமாரன் கணராஜன் காட்டில் கபிலமுனிவரது ஆசிரமத்தைக் கண்டான். தன் ஆசிரமத்திற்கு வந்த அரசகுமாரனை முறைப்படி வரவேற்று உபசரித்தார் கபில முனிவர். முனிவரின் ஆசிரமம், என்ன இருக்கப் போகிறது? காட்டில் கிடைக்கும் காய், கனி, கிழங்குவகைகள் என நினைத்த அரசகுமாரனுக்கு ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியம். அறுசுவை விருந்தே படைத்தார் கபிலமுனிவர். விருந்து முடிந்து கிளம்பும்போது இவ்வாறு விருந்து படைக்க எங்ஙனம் முடிந்தது என அரசகுமாரன் கேட்க, தன்னிடம் இந்திரன் அளித்த சிந்தாமணி இருப்பதாகவும், அது கேட்டதால் கொடுக்கும் என்றும், அதன் மகிமையாலேயே இவ்வாறு தக்காரைத் தக்கபடி தன்னால் உபசரிக்க முடிகிறது என்றும் வெளிப்படையாகச் சொன்னார் கபிலமுனிவர்.

அவர் என்னத்தைக் கண்டார்? கணராஜன் சிந்தாமணியைக் கேட்கப் போகிறான் என்று? அப்பாவியாய்ச் சொன்ன முனிவரிடம் நயமாகப் பேசிக் கேட்டுச் சிந்தாமணியைப் பெற முயன்றான் கணராஜன். முனிவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். பின்னர் பயமுறுத்த ஆரம்பித்தான் கணராஜன். முனிவரோ எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. பலவந்தம் ஒன்றே வழி எனக் கண்ட கணராஜன் அதைப் பலவந்தமாய்ப் பிடுங்கிக் கொண்டு சென்றுவிட்டான். மனம் வருந்தினார் கபிலமுனிவர். தேவி உபாசகரான அவர் தேவியை வணங்கி வேண்ட, அன்னையும் காக்ஷி அளித்து கணபதியைப் பிரார்த்திக்கச் சொன்னாள். கணபதியை முறைப்படி வணங்கிப் பிரார்த்தித்தார் கபிலமுனிவர். கணபதியும் அவர் வேண்டுகோளுக்கு இணங்கி கணராஜனுடன் போரிட்டார். கடம்ப மரத்தின் கீழ் கணராஜனைக் கோடரியால் கொன்றார் கணபதி.

மகன் இறக்கவே தன் பேரனுக்கு முடிசூட்டிய அபிஜித் மன்னன் சிந்தாமணியைத் திரும்ப கபில முனிவரிடமே கொடுத்தான். கபிலரோ அதை விநாயகருக்கு அணிவித்து அழகு பார்த்தார். இதனால் சிந்தாமணி விநாயகர் என்ற பெயரும் பெற்று இந்த ஊரிலேயே கோயிலும் கொண்டார். மற்றொரு தெரிந்த கதையும் உண்டு. கெளதம முனிவரின் மனைவியான அகல்யை இந்திரனிடம் ஏமாந்த கதை நமக்கெல்லாம் தெரியும் தானே? அப்பொழுது பாவம் செய்த இந்திரனை பாவம் நீங்க விநாயகரை நோக்கிதவம் செய்யுமாறு கெளதமர் கூறியதாகவும் அந்த விநாயகர் இவர் தான் என்றும் கூறுகின்றனர். இந்த விநாயகர் மஹாராஷ்டிரத்தின் பேஷ்வா குடும்பத்தைச் சேர்ந்த மாதவராவ் பெஷாவர் அவர்கள் குடும்பத்தின் குலதெய்வம் என்றும் இறக்கும் தருவாயில் கூட மாதவராவ் பெஷாவர் அவர்கள் கஜானன தோத்திரம் கூறிக்கொண்டே உயிர் நீத்ததாகவும் கூறுகின்றனர். கோயிலில் இருந்து மூலமுக்தா ஆற்றங்கரை வரையிலும் சாலை அமைத்தது பெஷாவர் குடும்பத்தினர் என்றும் கூறுகின்றனர். கோயிலைக்கட்டிய தரணிகர் மகராஜ் தேவ் அவர்களின் குடும்பம் காட்டில் நெடுங்காலம் தவம் செய்த மோர்ய கோசாவி குடும்பம் எனவும் சொல்லப் படுகிறது. விநாயகர் தொடர்பான அனைத்து விழாக்களும் இந்தக் கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.

http://marva78.deviantart.com/art/Ganesh-2-83381485