கடைசி எட்டாவது விநாயகர் கோயிலுக்கு இப்போ வந்திருக்கோம். மஹாராஷ்டிராவின் கர்ஜத் என்னும் ஊரில் இருந்து சுமார் 25 அல்லது முப்பது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது மஹத் என்னும் கிராமம். இதற்கு மும்பையில் இருந்தும் வரலாம். மும்பையில் இருந்து சுமார் 85 கிமீட்டர் தொலைவில் உள்ளது. இங்குதான் கோயில் கொண்டுள்ளார் ஸ்ரீவரத விநாயகர்.

கெளண்டின்யபூர் என்னும் ஊரை ஆண்டு வந்த மன்னன் பீமா புத்திரப்பேறு வேண்டி மனைவியோடு காட்டில் தவம் செய்து வந்தான். அங்கே இருந்த விஸ்வாமித்திரரோடு அவனுக்குச் சந்திப்பு ஏற்பட்டது. அவரிடம் தன்மனக்குறையைத் தெரிவிக்க அவரும் அவர்களுக்கு, கஜானன மந்திர உபதேசம் செய்தார். ஒரு கோயிலில் அமர்ந்து இந்த மந்திரத்தை ஜபிக்கும்படியும் கூறினார். அதன்படியே செய்த அரசனுக்கும், அரசிக்கும் ஒரு அழகிய மகன் பிறந்தான்.

மகனுக்கு ருக்மாங்கதன் என்ற பெயர் வைத்து வளர்த்து வந்தான் அரசன். அழகிலும், அறிவிலும் சிறந்து விளங்கிய ருக்மாங்கதன், தந்தையிடம் இருந்து கணேச மந்திர உபதேசமும் பெற்று தினமும் அதை ஜபித்து வந்தான். ஒரு முறை காட்டுக்கு வேட்டைக்குச் சென்ற ருக்மாங்கதன் களைப்பின் பேரில் அங்குள்ள ஒரு முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றான். முனிவர் பெயர் வாசகநவி என்பதாகும். அவர் அவனை வரவேற்றுப் பர்ணசாலையில் அமரச் செய்து தான் நீராடிவிட்டு வருவதற்காகக் கிளம்பினார். ரிஷி பத்தினியிடம் குடிக்க நீர் கேட்ட ருக்மாங்கதனுக்கு நீர் கொண்டு வந்த கொடுத்த ரிஷிபத்தினிக்கு அழகும், அறிவும், ஆண்மையும் நிரம்பிய ருக்மாங்கதன் மேல் ஆசை வந்தது. ருக்மாங்கதனிடம் அதைத் தெரிவித்துத் தன்னை ஏற்றுக்கொள்ளும்படி வேண்ட, அவனோ மறுத்துவிட்டான்.

கோபம்கொண்ட முகுந்தா என்னும் பெயருள்ள ரிஷிபத்தினி அவனைக் குஷ்டரோகியாக மாறும்படி சபிக்க, அப்படியே குஷ்டரோகியானான் ருக்மாங்கதன். மனம் வருந்தி எவரும் அறியாமல் கணேசனைக் குறித்துத் தவம் இயற்றினான் ருக்மாங்கதன். அப்போது அங்கே வந்த நாரத முனி அவனிடம் சிந்தாமணி குளக்கரையின் அருகில் உள்ள விநாயகரை வழிபட்டுத் தவம் இயற்றும்படி சொல்லிச் சென்றார். அப்படியே சிந்தாமணி குளக்கரைக்குச் சென்று அங்கிருந்த ஸ்ரீகணேசரை வழிபட்டுத் தவம் இருந்தான் ருக்மாங்கதன். கணேசரும் மனம் மகிழ்ந்து அவன் இழந்த அழகையும், ஆண்மையையும் திரும்பக் கொடுத்தார். முன்னெப்போதையும் விட இப்போது இன்னும் ஒளிர்ந்தான் ருக்மாங்கதன்.

முகுந்தாவோ எந்நேரமும் ருக்மாங்கதன் நினைவிலேயே இருந்தாள். யாரைப் பார்த்தாலும் அவள் கண்களுக்கு ருக்மாங்கதனாகவே தெரிந்தது. இப்படி அலைந்த அவளைக் கண்ட இந்திரனுக்கு அவள் மேல் ஆசை வர, அவள் ருக்மாங்கதனை நினைத்துத் தன்னை மறந்த நிலையில் இருக்கும்போது அவளை அடைந்தான். அதனால் அவள் கர்ப்பம் அடைந்தாள். குழந்தைக்கு கிரிட்ஸமாதா என்று பெயரிட்டு வளர்த்து வந்தாள் முகுந்தா. குழந்தை மிகவும் புத்திசாலியாகத் திகழ்ந்தான். வேதங்களிலும், மந்திரங்களிலும், மற்ற தந்திரங்களிலும் தேர்ந்தவன் ஆன கிரிட்ஸமாதா ஒரு முறை மகத மன்னனின் அவையில் நடந்த ஒரு விவாதத்தில் அத்ரி, விஸ்வாமித்திரர் போன்ற முனி சிரேஷ்டர்களோடு கலந்து கொண்டான். அவன் யார் என்பதை உணர்ந்த அத்ரி முனிவர் அவனிடம் அவன் வாசகநவி முனிவரின் சொந்த மகன் இல்லை எனவும், ருக்மாங்கதனின் மகன் எனவும் அவனிடம் கூற, அவனும் அதைத் தன் மகனிடம் கேட்கிறான்.

அன்னையோ பதில் சொல்லாமல் நிற்க, “பாவம் செய்த நீ முட்கள் நிறைந்த பழமாக மாறுவாய்!” என்று சபிக்கிறான். கோபம் கொண்ட முகுந்தாவும் மகனை,” ஒரு ராக்ஷசனுக்குத் தந்தையாவாய்!”என்று சபித்துவிடுகிறாள். அப்போது விண்ணிலிருந்து அசரீரி, “கிரிட்ஸமாதாவின் தகப்பன் இந்திரன்” என ஒரு குரல் ஒலிக்க, தாய், மகன் இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். கிரிட்ஸமாதா தன் கதி இப்படியானதை நினைத்து நொந்து போய் ஆசிரமத்தை விட்டு வெளியேறுகிறான். புஷ்பக் என்னும் காட்டில் விநாயகரை நினைத்துத் தவம் செய்கிறான். இலை, தழைகளையே உணவாக எடுத்துக்கொண்டு கடுந்தவம் செய்கிறான். விநாயகரும் மனம் மகிழ்ந்து வரம் கொடுப்பதாய்க் கூறுகிறார்.

கிரிட்ஸமாதாவும் தனக்கு எதுவும் வேண்டாம் எனவும், விநாயகரை அங்கேயே கோயில் கொண்டு பக்தர்களின் துயரைப் போக்கிப் புனிதப் படுத்த வேண்டும் எனவும் வேண்ட, விநாயகரும், அவன் பெயர் வேத விற்பன்னர்களில் முதலாக இருக்கும் என ஆசி வழங்கி அங்கே கோயில் கொள்வதாயும், வரும் நாட்களில் இந்தக் காடு பத்ரகா என்ற பெயரில் வழங்கப் படும் எனவும் கூறுகிறார். பின்னர் அங்கேயே வேண்டிய வரங்களைத் தந்தருளும் ஸ்ரீவரத விநாயகராக அருள் பாலிக்கிறார். சுயம்புவாகத் தோன்றியவர் என்று சொல்கின்றனர்

கி.பி.1725-ம் ஆண்டு இந்தக் கோயிலை பெஷாவர்கள் திருப்பணிகள் செய்து கட்டி முடித்தார்கள். மஹத் கிராமத்துக்கு இந்தக் கோயில் அன்பளிப்பாகக் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஓட்டுக்கூரையோடு கூடிய ஒரு வீடு போன்ற தோற்றத்தில் இந்தக் கோயில் காட்சி அளிப்பதாய்ச் சொல்கின்றனர். எட்டு யானைகள் தாங்கி நிற்பது போன்ற அமைப்போடு கூடிய இந்தக் கோயிலில் உள்ளே இரு விநாயகர் விக்கிரஹங்கள் இருப்பதாயும் கேள்விப் படுகிறோம். மூன்று கால பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வரும் இந்தக் கோயிலில் பக்தர்கள் அவர்களே தங்கள் கைகளால் விநாயகரைப் பூஜித்து வழிபடலாம். இங்கே யாத்ரிகர்களுக்குத் தங்கும் வசதிகளும் உண்டு. தியானம் செய்வதற்கு இந்த விநாயகர் கோயில் சிறந்த இடமாய்க் கருதப் படுகிறது.

இத்துடன் அஷ்ட விநாயகர் கோயில்கள் முடிவடைந்தன

Ganesh Chathurthi Wishes.