இனி நாம் காணப்போவது விநாயகரின் ஷோடச நாமங்கள் ஆகும். அதாவது விநாயகருக்கு உள்ள பதினாறு பெயர்களையும் அவற்றின் விளக்கங்களையும் பார்க்கப் போகிறோம். ஸுமுகர், ஏகதந்தர், கபிலர், கஜகர்ணகர், லம்போதரர், விகடர், விக்நராஜர், விநாயகர், தூமகேது, கணாத்யக்ஷர், பாலசந்த்ரர், கஜானனர், வக்ரதுண்டர், சூர்ப்பகர்ணர், ஹேரம்பர், ஸ்கந்தபூர்வஜர் என்று விநாயகருக்குப் பதினாறு பெயர்கள் உண்டு. முதல் நாமம் ஸுமுகர் என வருகிறது. எல்லாரிடமும் ஸுமுகமாய் இருக்கணும் என்று சொல்லுவார்கள் இல்லையா? “ஸூ” என்றால் நல்ல, முகம் என்றால் தெரியும் இல்லையா? நல்ல முகம். அதாவது இன்முகம். இன்முகம் காட்டி வரவேற்றார்கள் என்பார்களே, கேட்டிருப்பீங்க இல்லையா? விநாயகர் அத்தகையதொரு இன்முகத்தோடேயே எப்போதும் காட்சி அளிக்கிறார். ஆகையால் அவருக்கு ஸுமுகர் என்ற பெயர்.

விக்னேஸ்வரர் எந்த ரூபத்தில் இருந்தாலும் அவருடைய கருணா கடாக்ஷம் ஆநந்தத்தைப் பிரதிபலிக்கிறது. மேலும் அவரைப் பார்க்கும்போதே நமக்குள் இனம் தெரியாத ஒரு சந்தோஷம் உண்டாகிறது. பிள்ளையாரைப் பார்க்கப் பார்க்க நமக்கு அலுப்பதில்லை. எல்லாச் சிவாலயங்களிலும் இவரைப் பார்த்துவிட்டுத் தான் உள்ளேயே போகவேண்டும். அதிலும் தன் பெரிய தொந்தியைத் தூக்கிக்கொண்டு நிருத்த கணபதியாக நாட்டியமாடிக்கொண்டு காட்சி அளிப்பார். மேலும் முகம் என்றால் வடமொழியில் மூஞ்சிக்கு மட்டுமில்லாமல் வாய்க்கும் அதுதான் பெயர். முகம் என்றால் வாய்தான். தமிழில் மூஞ்சிக்குப் பெயரை முகம் என்ற வடமொழிப் பெயராலேயே அழைக்கிறோம். அத்தகைய வாயினால் ஸத் விஷயங்களைத் தன் வாயால் சொல்பவர் விநாயகர். வித்யை, அதனால் அடையும் ஞாநம் இவற்றை உடையவர் விநாயகர். அத்தகைய ஞாநத்தைத் தன் வாயினால் போதிப்பதாலேயும் இவர் ஸுமுகர் என்று சொல்கிறோம்.

மேலும் யானை வடிவான விநாயகருக்கு அந்த யானையைப் போலவே தும்பிக்கை உள்ளது அல்லவா? நமக்கெல்லாம் வாய் தெரிகிறாப்போல் உதடு இருக்கிறது. ஆனால் யானைக்கோ வாயை மூடிக்கொண்டு தும்பிக்கை தொங்குகிறது அன்றோ? அதே போல் விநாயகருக்கும் வாய் தெரியாமல் தும்பிக்கை இருக்கிறது. சாப்பிடும்போதும் யானை பிளிறும்போதும் மட்டுமே தும்பிக்கையைத் தூக்கிக்கொண்டு தன் வாயைக் காட்டுகிறது. அவ்விதமே விநாயகரும் காரண, காரியமில்லாமல் வாயைத் திறக்காமல் காரண, காரியத்தோடு வாயைத் திறக்கிறார். மற்ற நேரங்களில் தன் தும்பிக்கையால் வாயை மூடிக்கொள்கிறார். இது தான் அவருடைய ஸுமுகத்துக்குப் பொருள். அடுத்து ஏகதந்தர்.

பொதுவாய் யானைகளுக்கு, ஆண் யானைகளுக்கு இரண்டு தந்தங்கள் உண்டு. ஆனால் நம்ம பிள்ளையாரோ ஒரே தந்தக்காரர். எப்படினு பார்ப்போமா? இவருக்கும் இரண்டு தந்தங்கள் தான் இருந்தது. ஆனால் வலப்பக்கத்து தந்தத்தை ஒடிச்சுக்கையில் வைச்சிருப்பார். முதல்லே கொம்பை ஒடிச்சது எதுக்குன்னா கஜமுகாசுரனை வதம் பண்ண. தன்னோட கொம்பையே ஒடிச்சு அதை ஆயுதமா வைத்துக்கொண்டு கஜமுகாசுரனை வதம் பண்ணினார் கஜானானர். அடுத்துக் கொம்பை உடைச்சுக்கொண்டது வியாசர் மஹாபாரதம் சொல்லும்போது. வியாசருக்குத் திடீர்னு மஹாபாரதத்தைக் காவியமாய் வடிக்க எண்ணம் வந்து அதை யார் எழுதுவாங்கனு யோசிச்சப்போ பிள்ளையார் தான் சரியான ஆள்னு தோணி அவரைக் கூப்பிட்டு எழுதச் சொன்னாராம். பிள்ளையாரும் சரினு ஒத்துண்டு வந்தார்.

எழுதறதுக்கு இமயமலைப் பாறைகள் இருக்கு. ஆனால் எதை வைச்சு எழுதறது? வியாசரோ ஆரம்பிச்சுட்டார். விநாயகர் யோசிக்கவே இல்லை. தன்னோட தந்தத்தை ஒடைச்சு எடுத்துக்கொண்டு அதை எழுத்தாணியாய் உபயோகித்துக்கொண்டு எழுத ஆரம்பிச்சார். இப்படி ஒரு பக்கத்து தந்தத்தை உடைத்துக்கொண்டதால் ஏக தந்தர் என்ற பெயர் ஏற்பட்டது.

அடுத்த பெயர் கபிலர் என்பது. கபிலர் என்றால் சிவந்த நிறமுள்ளவர் என்று அர்த்தம். பிள்ளையாருக்கு இந்த நிறம் தான் எனக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. பல ஸ்வரூபங்களிலும் ஒவ்வொரு நிறம் உண்டு. வெண்மை நிறம், நீல நிறம், சிவந்த நிறம் எனப் பல நிறங்கள் உண்டு பிள்ளையாருக்கு.

கஜமுகாசுரனைக் கொன்ற ரத்தம் பூராவும் தஞ்சைக்கருகே திருச்செங்காட்டாங்குடி என்னும் ஊரின் காட்டில் பாய்ந்ததால் அங்கே உள்ள பிள்ளையாரும் அந்த ரத்தம் பட்டு சிவந்த நிறமாய் விட்டாராம். ஆகவே கபிலர் என்ற பெயரும் உண்டு பிள்ளையாருக்கு

அடுத்த பெயர் கஜகர்ணகர். கஜமுகர் என்று முகம் மட்டுமே யானை மாதிரி இருக்கிறதைச் சுட்டிக் காட்டுவது. கஜகர்ணகர் என்றால் யானைக்காது என்று அர்த்தம். கர்ணம் என்றால் காது தான் பொருள். இவ்வளவு பெரிய காது பிள்ளையாருக்கு எதுக்குன்னா, நம் குறைகளைக் கேட்பதற்கு என்றும் வைத்துக்கொள்ளலாம். யானை மற்றப் பிராணிகளைப் போல் அல்லாமல் காதை மட்டும் விசிறிக்கொள்ளும். மற்றப் பிராணிகளால் இவ்விதம் முடியாது. மாடு ஏதோ கொஞ்சம் ஆட்டிக்கொள்ளும், மனிதனுக்கோ ரொம்பவே சிரமமான ஒன்று. இப்படி இயலாத ஒன்றைச் செய்வதற்குத் தான் “கஜகர்ணம் போட்டாலும் நடக்காது” என்ற வழக்குச் சொல்லில் கூறுகிறோம். கஜகர்ணம் என்பதற்குப் பொருள் குட்டிக்கரணம் இல்லை. யானை எப்படித் தன் காதை மட்டும் ஆட்டிக்கொள்கிறதோ அப்படி நம்மால் இயலாது. ஆனால் இதை விநாயகர் எளிதாய்ச் செய்கிறார்.

மேலும் யானை என்றால் அதற்கு மத நீர் வந்து கொண்டிருக்கும், கன்னத்தில் வழியும் மத நீரால் மொய்க்கும் ஈக்களை, எறும்புகளை விரட்டவும் அது காதை விசிறி போல் ஆட்டிக்கொள்ளும். இங்கேயோ பிள்ளையாருக்குப் பெருகும் மத நீரை ஆன்றோர்கள் அவருடைய அருள் மழையாகச் சொல்கின்றனர். பக்தர்களுக்காகப் பெருகும் அருள் மழையை விளையாட்டாய்த் துடைக்கிறாராம் விநாயகர்.

அடுத்த பெயர் லம்போதரர். லம்போதரர் என்றால் பெரிய வயிறை உடையவர் என்று அர்த்தம். பிள்ளையாருக்கு எவ்வளவு பெரிய தொந்தி என்பது நான் சொல்லித் தெரியவேண்டாம். விநாயகர் அகவலில் ஒளவைப் பாட்டி “பேழை வயிறு” என்று சொல்கிறாள். இந்த வயிற்றுக்குள் என்ன இருக்கிறது? அண்டாண்டங்கள் இருக்கின்றன. அண்டங்களை எல்லாம் தன் வயிற்றுக்குள் அடக்கிக் கொண்டிருப்பதால் பேழை வயிற்றுக்காரராக இருக்கிறார் பிள்ளையார். சங்கீதத்தில் பால பாடம் ஆரம்பிக்கும்போது வரும் முதல் பாடலே, லம்போதர லக்குமிகரா என்று பிள்ளையாரைச் சொல்லித் தான் ஆரம்பிக்கும்.

எப்போவுமே தொந்தி, தொப்பையோடு யாரைப் பார்த்தாலும் நம்மையும் அறியாமல் மனம் குதூகலிக்கும். அதுவும் அவர் நம்ம இஷ்ட தெய்வமாயும் இருந்துட்டால்? கேட்கவே வேண்டாம். தொந்தி கணபதி மட்டுமில்லாமல் அவர் செளபாக்கியங்களைத் தரும் லக்ஷ்மிகரமாகவும் இருக்கிறார். பார்த்த மாத்திரத்தில் வேடிக்கையும் விநோதமுமாக மக்களைச் சிரிக்கப் பண்ணிக்கொண்டு காட்சி அளிக்கும் விநாயகரின் அடுத்த நாமாவளி விகடர்.

சம்ஸ்கிருத அகராதியில் விகடர் என்றாலே ஹாஸ்யம் என்று அர்த்தம் இருக்காது. கோரமாய் பயங்கரமாய் இருப்பதைத் தான் அதிலே சொல்லி இருக்கும். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் ஹாஸ்யம் செய்து சிரிக்க வைப்பவர்களையே விகடன் அல்லது விகடகவி என்றெல்லாம் சொல்கிறோம். இந்த ஹாஸ்யம் சும்மாச் சிரிக்க மட்டும் வைக்காமல் சிந்திக்கவும் வைக்கும் ஹாஸ்யம். விநாயகரின் புத்தி சாதுர்யத்திற்குக் கேட்கவே வேண்டாமே. சூரியனின் சீடர் ஆயிற்றே? தம் புத்தி சாதுர்யத்தால் நம்மைச் சிரிக்கப் பண்ணுகிறார் விகடரான விநாயகர்.

அம்மா உமையிடமும், அப்பா ஈசனிடமும் குறும்புகள் செய்து அவர்களைச் சிரிக்க வைப்பாராம். குழந்தைக்குறும்புடன் ரிஷிகளையும் வம்புக்கு இழுப்பாராம். இப்படி வம்புக்கு இழுத்த அகஸ்தியரின் கமண்டலத்து நீரே காவிரியாகப் பெருக்கெடுத்து ஓடியது என்பதை அறிவோம் அல்லவா? ராவணனை ஏமாற்றிக் கோகர்ணத்திலே ஆத்மலிங்கப் பிரதிஷ்டை பண்ணியதும் விநாயகரே. ஸ்ரீராமரின் குலதெய்வமான ஸ்ரீரங்கநாதரை ஸ்ரீராமர் தன் பட்டாபிஷேஹப் பரிசாக விபீஷணனுக்கு அளிக்கிறார். அதை எடுத்துக்கொண்டு இலங்கை செல்லும் விபீஷணனிடம் இருந்து அதை நாட்டை விட்டுச் செல்லாதபடிக்குத் தடுத்தவர் விநாயகர். விபீஷணனை ஏமாற்றிக் காவேரி நதிக்கும் கொள்ளிடத்துக்கும் நடுவே ஸ்ரீரங்கத் தீவில் அவரைப் பிரதிஷ்டை செய்யக் காரணகர்த்த விகடரான இந்த விநாயகரே. இதைத் தவிரவும் இந்த விகட விநாயகர் பண்ணிய குறும்புகளை ஒவ்வொன்றாய்ப் பார்க்கலாம்.

Lord Ganesh (Graffiti)