தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை – கணேசன்!

“மண்ணின் ஓர் ஐங்குணமாகி

வதிவான் எவன்நீர் இடை நான்காய்

நண்ணி அமர்வான் எவன் தீயின்

மூன்றாய் நவில்வான் எவன் வளியின்

எண்ணும் இரண்டு குணமாகி

இயைவான் எவன் வான் இடை ஒன்றாம்

அண்ணல் எவன் அக்கணபதியை

அன்பிற் சரணம் அடைகின்றோம்.”

நிலம் ஐந்து குணங்களை உடையது. நீர் நான்கு குணங்களை உடையது. தீ மூவகைப்படும். காற்று இரண்டு வகை. விண் ஒன்றே ஒன்று. இவை அத்தனையாகவும் கணபதி இருக்கின்றான். ஐந்து குணங்களை உள்ள பூமியின் தன்மையாகவும், நான்கு குணங்கள் உள்ள நீராகவும், மூன்று குணங்கள் உள்ள அக்னியாகவும், இரண்டு தன்மை கொண்ட காற்றாகவும், ஆகாயத்திலே இவை அனைத்தும் சேர்ந்த ஒன்றாகவும் பிரகாசிக்கின்றான் கணபதி. அத்தகைய கணபதியின் அன்பான திருவடிகளைப் போற்றி வாழ்த்தி சரணம் அடைகின்றோம்.

“பாச அறிவில் பசு அறிவில்

பற்றற்கரிய பரன்யாவன்

பாச அறிவும் பசு அறிவும்

பயிலப் பணிக்கும் அவன் யாவன்

பாச அறிவும் பசு அறிவும்

பாற்றி மேலாம் அறிவான

தேசன் எவன் அக்கணபதியைத்

திகழச் சரணம் அடைகின்றோம்.”

பந்த பாசங்களினாலும், ஞான அறிவினாலும் அறிய முடியாத பரம்பொருளான விநாயகன் அத்தகைய பாசமாகிய அறிவையும், நமக்கு வேண்டிய பசுவாகிய அறிவையும் நம்மைப் பயிலும்படிப் பணிக்கின்றான். அவனாலேயே இவை இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்துகொண்டு ஞானத்தை நாம் நாட முடிகிறது. இத்தகைய பந்தபாசங்களையும் அகற்றி நம் ஜீவனை ஞானத்தின்பால் செலுத்தி ஞான அருள் வழங்கும் தலைவனாக விளங்கும் கணபதியை வாயார வாழ்த்திச் சரணம் அடைகின்றோம்.

“இந்த நமது தோத்திரத்தை

யாவன் மூன்றுதினம் மும்மைச்

சந்திகளில் தோத்திரஞ்செயினும்

சகல கரும சித்தி பெறும்

சிந்தை மகிழச் சுகம் பெறும் எண்

தினம் உச்சரிக்கின் சதுர்த்தியிடைப்

பந்தம் அகல ஓர் எண்கால்

படிக்கில் அட்ட சித்தியுறும்”

இந்த காரியசித்திமாலையின் எட்டுப் பாடல்களும் கணபதி தோத்திராட்டகம் என வழங்கப் படுகிறது. இந்தத் தோத்திரத்தை மூன்று நாட்கள் மூன்று பொழுதுகளிலும் சொல்லுபவர்களுக்கு அனைத்துக் கருமங்களில் இருந்தும் சித்தி கிடைத்து முக்தி பெறுவார்கள். எட்டு நாட்கள் தொடர்ந்து உச்சரிப்போரும் சதுர்த்தி தினங்களில் எட்டு முறைகள் உச்சரிப்போரும் அட்டமாசித்திகளையும் அடைவார்கள்.

திங்கள் இரண்டு தினந்தோறும்

திகழ் ஒருபான் முறையோதில்

தங்கும் அரச வசியமாம்

தயங்க இருபத்தொரு முறைமை

பொங்கும் உழுவலால் கிளப்பின்

பொருவின் மைந்தர் விழுக்கல்வி

துங்க வெறுக்கை முதற்பலவும்

தோன்றும் எனச் செப்பினர் மறைந்தார்.

ஒவ்வொரு நாளும் பத்துமுறைகள் என இரண்டு மாதங்கள் தொடர்ந்து படித்தால் அரசாங்க சம்பந்தமான காரியங்கள் அனைத்தும் கைகூடும். அவ்வாறு இருபத்தொரு முறைகள் ஓதினால் மக்கட்பேறு, கல்வி, செல்வம் முதலிய எல்லா நலங்களையும் அடைவார்கள்.” என்று விநாயகர் காசிபர் முதலானோர்க்கு அருளிச் செய்ததாக விநாயக புராணம் கூறுகின்றது.

எது எப்படி இருந்தாலும் நம்பிக்கையுடன் விநாயகர் கோலம் போட்டு, இந்தக் காரிய சித்திமாலை படிச்சுட்டு, விநாயகரை வேண்டிக் கொண்டால் வேண்டிய காரியங்கள் நிறைவேறுகின்றன என்பதற்கு நான் காரண்டி!

Clay Ganesha