வழிபடும் முறை

சிவ பெருமானுனம், உமை அம்மையும் விநாயகரை ஆசீர்வதித்தனர். “யாராக இருந்தாலும் ஒரு செயலைத் துவங்குமுன் முதலின் உன்னை வணங்கி விட்டு ஆரம்பிக்க வேண்டும். அப்போது தான் அந்தக் காரியம் பூர்த்தி ஆகும். அவ்வாறன்றி உன்னை வணங்காமல் ஆரம்பிக்கும் செயல் முற்றுப் பெறாது.” என்று அருளினார்கள். தீச் செயல்கள் புரிபவர்கள் யாரும் விநாயகரை வணங்கி விட்டு ஆரம்பிக்க மாட்டார்கள். அப்படியே ஆரம்பித்தாலும் ஏதேனும் இடையூறு வரும். இந்த வரம் கடவுளருக்கும் பொருந்தும் என்று அருளியதால் சிவபெருமான் ஒருமுறை திரிபுர அசுரர்களை வெல்லப் புறப்பட்ட சமயம் விநாயகரை வழிபடாமல் கிளம்பிச் சென்றதால் அவர் தேரின் அச்சு முறிந்தது என்று புராணம் கூறுகிறது. இதே போல் அகந்தையால் பிரம்மா விநாயகரை வழிபடாமல் சிரு்ஷ்டி செய்ய அவர் படைத்த மனிதர்கல், மிருகங்கள், பறவைகள் எல்லாம் பேய், பிசாசுகளாய் மாறிவிட்டன. பின்னர் கணபதியை ஆராதனை செய்து வழிபட்டபின் சரியான கோணத்தில் சிருஷ்டி ஆரம்பித்தது.

இப்போ மாம்பழக் கதையாகச் செவிவழியாக நாம் கூறுவது உண்மையில் அமிர்தத்தால் ஆன மோதகம் என்றும், அதை உலகைச் சுற்றிப் புண்ணியம் சேர்த்துக் கொண்டு வருபவருக்குத் தருவதாயும் சிவன் சொல்ல, விநாயகர் தாய், தந்தையை விடச் சிறந்த உலகம் இல்லை எனச் சொல்லி அவர்களைப் பணிந்து நிற்க, மோதகம் அவருக்குக் கிடைத்தது. அன்றில் இருந்து மோதகம் விநாயகருக்குப் படைக்கப் படும் பொருள் ஆனது என்கிறது புராணம். ஆனானப் பட்ட விநாயகரே தாய், தந்தையருக்கு மரியாதை கொடுக்கும்போது நாம் எப்படி நடக்க வேண்டும்? குழந்தைகளே! தெரிந்து கொள்ளுங்கள். விநாயகர் என்ற பெருக்கு அர்த்தம் என்ன தெரிய்மா? “வி” என்றால் தன்னிகரற்ற என்று பொருள் படும். நாயகர் என்றால் தலைவர். தன்னிகரற்ற தலைவரான இந்த விநாயகருக்குக் குரு யார் தெரியுமா? சூரியன் தான் விநாயகரின் குரு. அது போல் இன்னொருவருக்கும் சூரியன் தான் குரு. அவர் யார் தெரியுமா? நம் வாயு புத்திரன், வானர வீரன், அஞ்சனை புத்திரன் அனுமந்தனுக்கும் சூரியன் தான் குரு. இருவரும் சூரியனிடம் தான் வேத சாஸ்திரங்களைப் பயின்றார்கள். அதுவும் எப்படி? நம்ம வகுப்பில் உட்கார்ந்து கேட்பதைப் போல் எல்லாம் இல்லை.

சூரியனோ தாங்க முடியாத சூடு உள்ளவன். அவனிடம் பாடம் கேட்பது என்றால் லேசா? நம்மால் முடியத் தான் முடியுமா? விநாயகரையும், அனுமனையும் போல் சக்தி வாய்ந்தவர்களால் தான் முடியும். தினம் தினம் உலகை வலம் வருகிறான் சூரியன். ஒரு நிமி்ஷம் கூடச் சும்மா இருப்பதில்லை. இதிலே அவன் செய்யும் வழிபாடு வேறு. அப்போ என்ன செய்யலாம்? சூரியன் தினமும் ஸ்ரீமன்நாராயணனை வழிபடும் நேரம் அவனை வலம் வந்து பாடம் கேட்டு சாஸ்திரங்களைப் பயின்றவர் விநாயகர். எவ்வளவு கஷ்டம் இது? இப்படி எல்லாம் க்ஷ்டப்பட்டுப் பாடம் பயின்றார் விநாயகர். அனுமன் எப்படிப் பாடம் பயின்றார் தெரியுமா? வாயுவேகத்தில் சுழன்று கொண்டிருக்கும் சூரியனின் ரத்ததிற்கு முன்னால் கை கூப்பி நின்று ரதம் எந்த வேகத்தில் போகிறதோ அதே வேகத்தில் பின்புறமாய் நடந்து பாடம் கேட்டானாம் அனுமன். இரண்டு பேரும் ஒரே குருவின் மாணாக்கர்கள் என்பதால் தான் நாம் எந்தக் காரியத்தையும் பிள்ளையாரில் தொடங்கி அனுமனில் முடிக்கிறோம். இன்றைய நாளில் “பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது” என்று சொல்கிறார்கள். அது எவ்வளவு தப்பு தெரியுமா?

நாம் பூஜையோ பஜனையோ செய்யும் போது எப்போதும் பிள்ளையார் பூஜையில் ஆரம்பித்து, அனுமன் பூஜையில் முடிக்க வேண்டும். அது தான் முறை. இதைத் தான் யாரோ பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது எனச் சொல்லி வைக்க, சம்பிரதாயமான பூஜை முறைகளின் அர்த்தமே மாறி விட்டது. இப்போ நாம் செய்யும் தெய்வ வழிபாடு எல்லாமே ஆவணி மாதம் சுக்கிலச் சதுர்த்தியில் வரும் பிள்ளையார் சதுர்த்தியில் ஆரம்பிக்கும். அதுக்கு அப்புறம் ஸ்ரீராமநவமிக்குப் பின் வரும் அனுமத் ஜெயந்தியில் முடியும் நம்முடைய பூஜை புனஸ்காரங்கள். ஆனால் இன்றோ மாறிச் செய்து வருகிறோம். அனுமத் ஜெயந்திக்கு அப்புறம் சில மாதங்களுக்கு ஒன்றுமே இருக்காது. திரும்ப அடுத்த வருஷம் பிள்ளையார் சதுர்த்தியில் ஆரம்பிக்க வேண்டும். அடுத்து நாம் பிள்ளையாரை எவ்வாறு வழிபடுவது என பார்ப்போம்.

https://upload.wikimedia.org/wikipedia/en/e/ed/Lord_Ganesha_carved_in_wood.jpg