1 அத்தியாயம் 1

பிள்ளையார், பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார்!

இப்போ நாம் முதலில் பிள்ளையாரைப் பத்தித் தெரிஞ்சுக்கலாமா? நாம எழுதறப்போ கூட பிள்ளையார் சுழின்னு போட்டுத் தான் எழுதுவோம், இல்லையா? பிள்ளையார் சுழி எப்படிப் போடணும்னு தெரியும் இல்லையா? 2 மாதிரிப் போட்டுக் கீழே 2 கோடு போடணும். இது “ஓம்” என்னும் எழுத்தின் சுருக்கம்னு சொல்லுவாங்க. நாம எந்தக் காரியத்தைச் செய்ய ஆரம்பிச்சாலும் முதலில் பிள்ளையாரை வணங்கிட்டுத் தான் ஆரம்பிக்கணும். அப்படித்தான் ஆரம்பிப்போம். பிள்ளையாரைக் கும்பிட்டு ஆரம்பிக்கிற வேலையில் தடங்கல் வராமல் இருக்கும்னு ஒரு நம்பிக்கை. அதனால் தான். நாம செய்யற காரியத்தில் தடங்கல் ஏற்படுவது நம்மளோட துரதிருஷ்டம்னு நினைப்போம் இல்லையா? அதனாலே தான் முதலில் பிள்ளையாரை நினைச்சுப் பிரார்த்தனை செய்ய வேண்டும். அது எப்படி வேணாலும் இருக்கலாம்.

“விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் —
விநாயகனேவிண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணிற் படுமின் கனிந்து!”

என்று ஒரு தமிழ்ப் பாடல் இருக்கிறது. இதன் அர்த்தம் என்னன்னா, நம்மளோட வினை எல்லாத்தையும், அதாவது நாம் செய்யற, செய்யப் போற பாவங்கள் எல்லாத்தையும் வேரோடு அறுத்து விடுவான் விநாயகன் என்று முதல் வரிக்கு அர்த்தம். 2வது வரிக்கு விநாயகன் நம்முடைய வேட்கை தணிவிப்பான் என்றால் நம்முடைய நியாயமான வேண்டுகோள்களை நிறைவேற்றி வைப்பான் என்று பொருள் கொள்ள வேண்டும். அடுத்து என்ன சொல்றாங்கன்னா, “விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்” இந்த உலகமே அவருடைய தொந்திக்குள் அடங்கி இருக்கிறதுன்னு அர்த்தம். அதான் விநாயகர் தொந்தி பெரிசா இருக்கு பார்த்தீங்களா? இந்த மாதிரியான பெரிய தொந்திக்குள் உலகே அடக்கி இருக்கும். இந்த விநாயகர் தான் இந்த மண்ணால் ஆகிய பூமிக்கும், சுடர் விட்டுப் பிரகாசிக்கும் விண்ணான ஆகாயத்துக்கும், சகலத்துக்கும் நாயகன், அதாவது தலைவன் ஆகிறான். அடுத்து என்ன சொல்றாங்க? ஆகையால் அந்த விநாயகனை வணங்கிக் கும்பிடு, உன்னோட எல்லா வேலையும் நல்லா நடக்கும். அதான் “தன்மையிலே கண்ணிற்படுமின் கனிந்து!”ன்னு சொல்றாங்க. “கனிந்து”ங்கிற வார்த்தையோட முழு அர்த்தம் விநாயகனின் சக்தியை நாம் நல்லாத் தெரிந்து கொண்டு, மனம் கனிந்துன்னு இந்த இடத்திலே அர்த்தம் பண்ணிக்கணும்.

அடுத்து இன்னொரு முறையிலே ஸ்லோகம் சொல்லிக் கூட விநாயகரை வழிபடலாம்.

“சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ன உப சாந்தயே!”

மஹாவிஷ்ணுவிற்கு நிகரானவரும், வெள்ளை உடை அணிந்தவரும், ரொம்பவே மகிழ்ச்சியான முகத்தைக் கொண்டவருமான அந்த விநாயகரைக் கும்பிடுகிறேன். என்னுடைய காரியங்களில் உள்ள விக்னங்களை நிவர்த்தி செய்து வேலைகளை முடித்துக் கொடுக்கட்டும்.” என்று வேண்டிக் கொண்டு தான் பெரியவங்க எல்லாம் அவங்க ஜபம், தபம், பூஜை, புனஸ்காரம் எல்லாம் செய்வாங்க இல்லையா? அதான் மேற்படி ஸ்லோகத்தின் கருத்து.

அடுத்து நாம் விநாயகர் எப்படி வந்தார்னு பார்க்கலாம்.

https://upload.wikimedia.org/wikipedia/commons/3/35/Chola_Ganesha.jpg

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *